ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதி காலை முதல் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை சாரல் மழை பெய்து வந்தது. கடந்த 20 தினங்களாக மழைப் பொழிவு இன்றி வறண்ட வானிலையே காணப்பட்டது.
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளிலும், நள்ளிரவு முதல் சத்திரப்பட்டி, சங்கர பாண்டியபுரம், அய்யனாபுரம், கோவிலூர், தேவதானம், தளவாய்புரம், செட்டியார் பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த மழை தற்போது குறைந்துள்ள நிலையில், தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் 20 நாட்களாக காய்ந்திருந்த பூமி குளிர்ந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில விவசாய கண்மாய்களில் தண்ணீரின் அளவு சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் தண்ணீர் பெருகி வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இரவு முழுவதும் தொடர்மழை பெய்து வந்த நிலையில் கீழ ரத வீதியில் உள்ள ஜெயராம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை பல்வேறு நீர்வரத்து பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.