தென்காசி மாவட்டத்தில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை – குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இந்த கனமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது பெய்துள்ள இந்த மழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரானது அபாய வளைவை தாண்டி கொட்டி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருவிகளில் வெள்ள நீர் குறைந்த உடன் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.