திருவண்ணாமலையில் மண்சரிவு விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
தற்போதைய சூழல் குறித்து அலைபேசியில் புகைப்படம் எடுத்த நீதிபதி…
நீதிமன்றத்திற்கும் அரசுக்கும் மனித உயிர்கள் முக்கியம்…உயிர்களை காப்பாற்றுவது பெரிய விஷயம்… நீதிபதி
திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி வரலாறு காணாத பெய்த பெஞ்சல் புயலால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக மண்ணில் புதையுண்டு உயிரிழந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரண்டு நாள் திருவண்ணாமலையில் முகாமிட்டுமண்ணில் புதையுண்ட இறந்தவர்களின் உடலை சடலமாக மீட்டனர்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த ஐஐடி பேராசிரியர்கள் இந்த இடம் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம் என்று அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்க விருப்பம் இல்லாதவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக தகவல் அளித்தால் மாற்று இடம் ஏற்படுத்தி தரப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 20 நபர்களுக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தற்காலிகமாக கூரை அமைத்து வீடு கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இவர்கள் அனைவரும் வருகின்ற தை மாதம் பொங்கல் தினத்தன்று புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தசராஜ், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மன்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியிடம் விவரமாக விவரித்தார். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த பின்னர் அங்கு இருக்கும் தற்போதைய சூழல் குறித்து தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நீதிமன்றத்திற்கும் அரசுக்கும் மனித உயிர்கள் முக்கியம், உயிர்களை காப்பாற்றுவது பெரிய விஷயம் என்றும் கூறினார்.
வீடு கட்டுபவர்கள், கட்டும் வீட்டினை பந்தமாக நினைப்பதால் அதனை விட்டு விட்டு வெளியேறுவதற்கு மனம் வராது என்றும் அதற்காக மனித உயிரை விடுவது என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம் என்றும் அதற்கான நிவாரணம், வழிவகைகள் என்ன? என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.