நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் காவல்துறையினர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். அவர்களுக்கு வாக்குப்பதிவு செய்ததற்காக விரலில் மை வைக்கப்பட்டது.
மக்களவைத்தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை இந்த முறை அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுப்பதிவில் மாற்றம் செய்து வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் தபால் ஓட்டுப் பதிவு செய்து பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டது..
100 சதவீதம் வாக்குப்பதிவை அடையும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பிற மாவட்டங்களில் ஓட்டு இருக்கும் நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் காவல்துறையினர் முன்பே விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தபால் ஓட்டுப் பதிவு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நேற்று 15- ந்தேதி நடந்தது. இன்று காவல்துறையினர் தங்களது தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர். நெல்லை மாநகர் பகுதியில் காவல்துறையினர் தபால் வாக்குகளை பதிவு செய்ய வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டு வாக்குகளை செலுத்தினர்.
வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு, அவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டு வாக்குச்சாவடி போன்றே அமைக்கப்பட்ட மறைவிடத்தில் காவல்துறையினர் வாக்குப்பதிவு செய்து தபால் ஓட்டுக்களை பெட்டியில் போட்டனர். இவை அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தபால் ஓட்டுப்பதிவு செய்த காவலர்களுக்கு விரலில் மை வைக்கப்பட்டது. நெல்லை மாநகரில் வெளியூரில் இருந்து இங்கு பணியாற்றும் 91 காவலர்களும், மாவட்ட காவல்துறையில் 527 காவலர்களும் தங்களது தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர் தபால் ஓட்டுப்பதிவை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தாக்ரேசுபம் ஞானதேவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுபோன்று மாவட்டத்தில் வள்ளியூர், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களிலும் காவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.