நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியவாறு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
கொடைக்கானல் ஸ்ரீ குறிஞ்சி மாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியவாறு பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ குறிஞ்சி மாரியம்மன் திருக்கோவில், கடந்த மாதம் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவ திருவிழா தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினந்தோறும் குறிஞ்சி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டும் 3 நாட்களாக மின் அலங்கார தேர்பவனி நடைபெற்று வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மேளதாளங்கள் முழுங்க டிப்போ காளியம்மன் கோவிலிருந்து அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், காவடி எடுத்தும், காளிவேடம் அணிந்தும், ஏரிச்சாலை, பஸ் நிலையம், மூஞ்சிக்கல், அண்ணாநகர் வழியாக சென்று கோவிலின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியவாறு பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனையடுத்து குறிஞ்சி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டும், எலுமிச்சமாலை மற்றும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குறிஞ்சி மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இவ்விழாவில் சிவன், அம்மன் வேடம் அணிந்து நடனம் ஆடியது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.