ஆட்சியர் அலுவலகத்திற்குள் திரண்ட நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள்
எம்எல்ஏ தலைமையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக திரண்டு வந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள். வியப்புடன் பார்த்த ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்
திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி, விளக்குடி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு பெருமாள் மாட்டுக்காரன் என்கிற சாதி குறிப்பிடப்பட்டு எம்பிசி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.இதன் காரணமாக தங்களது குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட இதர உரிமைகள் தங்களுக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் போன்ற பகுதியில் வசிக்கும் தங்களது உறவுகளுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மனு அளிப்பதற்காக ஆப்பரக்குடி, விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து எம்எல்ஏ தலைமையில் அவர்கள் இது குறித்து மனு அளித்துள்ளார்.ஏற்கனவே 9 முறை இது குறித்து மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீதா மணியிடம் புகார் அளித்திருப்பதாகவும் அதனை தொடர்ந்து மானுடவியல் பேராசிரியர்கள் சென்னையில் இருந்து வந்து ஆய்வு செய்த பிறகு தங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சாதி சான்றிதழ் மாறி வந்த ஒவ்வொருவரும் முறையாக தங்களது ரத்த உறவுகளின் சாதி சான்றிதழை வைத்து மேல்முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முகாமிற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் நுழைந்ததால் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை வியப்புடன் பார்த்தனர்.