திருச்சி துறையூர் அருகே கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி கணவன் உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (45). இவரது மனைவி சங்கீதா (37). இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. தம்பதியினர் இருவரும் வீட்டிலேயே முறுக்கு, அப்பளம் உள்ளிட்ட திண்பண்டங்களை தயார் செய்து துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுரேஷ் வீடு கட்டுவதற்காக தனியார் நிதி நிறுவனம், மகளிர் சுய உதவி குழு, மற்றும் ஒரு சில தனிநபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தீபாவளி பண்டிகை நெருங்குவதால், கடன் கொடுத்தவர்கள் சுரேஷிடம் கொடுத்த தொகையை கேட்டுள்ளனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த தம்பதியினர் இருவரும், காய் நறுக்கும் கத்தியை கொண்டு தங்களது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு அலறி உள்ளனர். அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், இருவரையும் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சுரேஷ் சிகிச்சை பலன் இன்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சுரேஷின் மனைவியான சங்கீதா என்பவர் மிகவும் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.துறையூரில் கடன் தொல்லையால் தம்பதிகள் இருவர், கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.