ரஜினி படத்துக்கு இளையராஜா நோட்டீஸ்
ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் தலைப்பை டீசர் வாயிலாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில், தங்கமகன் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடல் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த டீசரும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், கூலி படத்தில் அனுமதியின்றி, தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
அதில், கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போன்று, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ‘பைட் கிளப்’ என்ற படத்திலும் “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பாக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்லது, டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில், இளையராஜா இசை குறித்து வைரமுத்து விமர்சித்த நிலையில், அதற்கு கங்கை அமரன் எதிர்வினையாற்றி இருந்தார். இத்தகைய சூழலில், இளையராஜா தனது இசை குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.