in

இரு மொழி கொள்கையை அமல்படுத்துவோம் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

இரு மொழி கொள்கையை அமல்படுத்துவோம் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

 

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 2026 அம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றதும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்து இரு மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் ஆளும் பாஜக அரசு அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிக்கும் வகையில் மும்மொழி கொள்கையை தீவிரமாக்கி வருகிறது. வட மாநிலங்களில் இந்தியை மட்டும் முதன்மை மொழியாக கொண்டு, 02 மற்றும் 03ம் மொழிகளை அமுல்படுத்த மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது.

புதுச்சேரியில் தனது தலைமையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு இருந்த போது, மத்திய அரசால் நிர்பந்திக்கப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்காது அமைச்சரவை மற்றும் சட்டப்பேரவையிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போதுள்ள ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்-பாஜக அரசு இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை ஆதரிக்கிறது. அது மட்டுமன்றி புதுச்சேரியில் அவசரகதியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்தியதால், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்காத காரணத்தால் கல்வி கற்கும் மாணவர்களும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்முறையாக இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தில் தேர்வு எழுதுவதை மிக கடினமாக கருத வேண்டி உள்ளது என்றும் இதனால் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என கூறிய நாராயணசாமி, 2026ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றதும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்து இரு மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என்றார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அரசு இதுவரை ரூ.4ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஏற்கெனவே தங்களது ஆட்சி காலத்தில் ரூ.8,500 கோடி கடன் நிலுவை உள்ளது. மேலும் பல நிலைகளில் ரூ.7,500 கோடி கடன் பெற முயற்சிப்பது, புதுச்சேரி மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும். ரங்கசாமி வெறும் அறிவிப்புகளை செய்யும் அறிவிப்பு முதல்வராகவே இருக்கிறார்.

புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலை அமைக்க அனுமதித்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளது புதுச்சேரிக்கு தேவையற்றது. ஒரு ஆலைக்கு ரூ.10 கோடிக்கு மேல் இந்த அரசு லஞ்சம் பெறப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய நாராயணசாமி, தற்போது புதுச்சேரி அரசு ஊழல் மிகுந்த அரசாக உள்ளது என்றும், அனைத்து துறையிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி அரசு கடந்த 5ஆண்டுகளில் காரைக்காலை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. அதற்கான இடம் கூட தேர்வு செய்யவில்லை என்றும் கூறினார். மேலும் காரைக்கால் மக்களின் மருத்துவ தேவைகளில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார். காரைக்கால் மாவட்டத்தில் காவல் துறையில் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் பதவி பல காலியாக உள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார். காரைக்காலில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது.

கோவில் நில மோசடி வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கி வருவதாகவும், குற்றவாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் துணை போவதால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது என்றும், புதுச்சேரியில் 20க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ள நிலையில் காரைக்காலுக்கு ஒரு அதிகாரியை அனுப்ப கூடாதா என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, பல விதத்திலும் காரைக்காலை புறக்கணித்து வரும் புதுச்சேரியை ஆளும் பாஜக – என்.ஆர் காங் அரசுக்கு காரைக்கால் மக்கள் வரும் 2026ம் ஆண்டு சடட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

What do you think?

திருப்பதி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மேற்கொண்ட சாகச பயணம்

தேரிழந்தூரில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி