சிதம்பரத்தில் விசிகள் காங்கிரஸ், தி.க உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசிக நிர்வாகியை தாக்கி செல்போன் பறித்த சம்பவம். தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் விசிகள் காங்கிரஸ், தி.க உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளரான இளையராஜா(40). என்பவர் நேற்று இரவு நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது தீட்சிதர்கள் சிலர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள காலி இடத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர். இதை இளையராஜா தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அப்போது தீட்சிதர்கள் அவரை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இளையராஜா அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர காவல் நிலைய போலீசார் 5 தீட்சிதர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தீட்சிதர்களை கைது செய்யக்கோரி சிதம்பரத்தில் இன்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி தலைமை தாங்கினார்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது நடராஜர் கோயிலுக்கு எதிராகவும், கோயில் தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.