நூல் வெளியீட்டு கூட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ. மணியரசன் குற்றச்சாட்டு
மத்தியில் பாஜக இருந்தாலும் காங்கிரஸ் இருந்தாலும் அது தமிழர்களுக்கான அரசு இல்லை என திருவாரூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு கூட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ. மணியரசன் குற்றச்சாட்டு.
திருவாரூரில் சுதந்திர போராட்ட தியாகி வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த செம்மாப்புத் தமிழர் சிதம்பரச்செம்மல் நூல் அறிமுக கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.
புலவர் ரா. மதிவாணன் எழுதிய இந்நூலை பெ. மணியரசன் வெளியிட மருத்துவர் பாரதி செல்வம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ. மணியரசன் கூறியது …
மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி நீரை கர்நாடகா விடுவிக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு முறையாவது உத்தரவு பிறப்பித்த காவிரி ஆணையம் அந்த நீரை தமிழகத்துக்கு பெற்றுத்தர முயற்சி செய்துள்ளதா? அதன் தலைவராக உள்ள ஹல்தார் ஒருதலை பட்சமானவர். அவர் தமிழகத்துக்கு ஆதரவாக எந்த ஒரு முடிவையும் மேற்க்கொள்ள மாட்டார். அவரை உடனடியாக மாற்ற வேண்டும்.
தற்பொழுது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க பல நாடுகள் உள்ளது. ஆனால் இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அதற்கு இந்திய அரசு குரல் கொடுக்கவில்லை. மாறாக அந்த விசாரணையை மூடி மறைக்க உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியது இந்திய அரசுதான். 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐநாவில் குரல் கொடுக்க ஆதரவு உள்ளது. ஆனால் 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழினத்துக்கு குரல் கொடுக்க ஐநாவில் யாரும் இல்லை.
மத்தியில் பாஜக வந்தாலும் சரி, காங்கிரஸ் வந்தாலும் சரி அது அது தமிழர்களுக்கான அரசு இல்லை என்றார்.