புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் திருக்கோவிலில் வித்யாரம்பம் தொடக்க விழாவில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு நெல்மணியில் ஓம் ஸ்ரீ ஹரி என எழுதி கற்பித்தல் நிகழ்ச்சியை தொடங்கினர்
கலைமகள், அலைமகள் மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில் கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி ஆவார்.நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் கற்றுத்தர உகந்த நாளாக கருதப்படுகிறது.வித்யா என்றால் அறிவு ஆரம்பம் என்றால் துவக்கம் ஆகும். இந்த அழகான சடங்கு முறை நமது பாரம்பரியமாக விளங்குகிறது.
இதனை அடுத்து புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் திருக்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நடைபெற்றது.இதில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து நெல்மணியில் ஓம், ஸ்ரீ ஹரி,அ ,ஆ 1,2,3 உள்ளிட்ட ஆங்கில எழுத்துக்களை எழுதி தங்களது கல்வியை தொடங்கினர். தொடர்ந்து ஹயக்ரீவ பெருமாளை வழிபட்டு சென்றனர்.