திருச்சியில், பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் வீட்டில், தி.மு.க. வேட்பாளரின் பணம் பதுக்கி வைத்திருக்கலாம், என்ற சந்தேகத்தில், நேற்று இரவு முதல் 12 மணி நேரமாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, எடமலைப்பட்டி புதுாரைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி என்பவர் பொதுப்பணித்துறை பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமாக இருந்த அவர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தி.மு.க., நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மகன் அருண் நேருவுடன் நெருக்கமானார்.
திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை மட்டுமின்றி பல்வேறு ஒப்பந்தப்பணிகளை முடிவு செய்வதும், காண்ட்ராக்டர்களிடம் அதற்கான கமிஷனை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு செல்வாக்கான நபரானார் ஈஸ்வர மூர்த்தி .லோக்சபா தேர்தலில் பெரம்பலுார் தொகுதியில், அமைச்சர் நேரு மகன் அருண் தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், எடமலைப்பட்டி புதுாரில் உள்ள காண்ட்ராக்டர் ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு, நேற்று இரவு, 7 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள், 5 பேர் காரில் வந்தனர்.
வீட்டின் முன் துணை ராணுவ படை வீரர்களை பாதுகாப்பு நிறுத்தி விட்டு, வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு துவங்கிய சோதனை தற்போது வரை 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. தி.மு.க. வேட்பாளரின் பணம் பதுக்கி வைத்திருக்கலாம், என்ற சந்தேகத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.