மாவீரன் காடுவெட்டியார் விழா கனலரசன் சிதம்பரத்தில் பேட்டி
மாவீரன் காடுவெட்டியார் விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி. காடுவெட்டி குரு மகன் கனலரசன் சிதம்பரத்தில் பேட்டி. இந்த அமைப்பின் நோக்கம் சமுதாயத்தை சீரமைப்பதுதான். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக தகவல்.
வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் இன்று சிதம்பரம் வந்தார். பின்னர் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
நேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி மாவீரன் காடுவெட்டியார் பிறந்த நாள் விழா, வன்னியர் ஜெயந்தி விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த, அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அனைத்து சமுதாய தலைவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் நோக்கமே இந்த சமுதாயத்தை சீரமைக்க வேண்டும் என்பதுதான். தற்போது 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் தந்தை இருந்தபோது 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 13 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை எவ்வளவு வருகிறதோ அவ்வளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விரைவில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்.
தெற்கே தேவர் ஜெயந்தி போல், வடக்கே மாவீரர் காடுவெட்டியார் பிறந்த நாளை நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் வன்னியர் ஜெயந்தி விழாவாக கொண்டாடி வருகிறோம். யார் எங்கே வேண்டுமானாலும் மணி மண்டபம் கட்டலாம். ஆனால் தலைவர் உயிர் விடுத்த இடத்தில்தான் எல்லோரும் வந்து வணங்குகிறார்கள். அந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பது எங்களது விருப்பம். எல்லா மாவட்டங்களிலும் அந்தந்த பகுதிகளில் எங்கள் சமூகத்திற்கு எந்தெந்த தலைவர்கள் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம்.
காடுவெட்டியாரை நாங்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க விரும்பவில்லை. அவர் அனைத்து சமுதாயத்தினரும் போற்றப்படும் தலைவராக இருக்கிறார். காடுவெட்டி கிராமத்தில் இரட்டை குவளை முறையை ஒழித்தார். குடிதாங்கி கிராமத்தில் இறந்த தலித்தின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய உதவினார். அவர் அனைத்து சமுதாயத்தினரையும் பாதுகாக்கும் தலைவராக விளக்குகிறார். ஆனால் அவரை பாமக, வன்னியர் சங்கம் என ஒரு குறுகலான இடத்துக்குள் சுருக்குவது வருத்தமாக இருக்கிறது.
வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது ஏராளமான இளைஞர்களால் ஒவ்வொரு கல்லாக கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அங்கு 80 ஆயிம் 1 லட்சம் என நன்கொடை வாங்குகிறார்கள். வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான திமுக அமைச்சரை வைத்து குரு சிலையை திறந்ததாக கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் நடத்தும் கல்வி நிலையத்தில் எத்தனை வன்னியர்களுக்கு நன்கொடை இல்லாமல் சீட்டு கொடுத்து இருக்கிறீர்கள். இட ஒதுக்கீட்டுக்காக திமுக என்ன செய்தது? அதிமுக என்ன செய்தது என்பதை தாண்டி, இட ஒதுக்கீட்டுக்காக பாமக என்ன செய்தது?
பாமகவில் வழக்கறிஞர் பாலு எந்த பணியையும் ஒழுங்காக செய்யவில்லை. செய்திருந்தால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். எங்களது நோக்கம் இந்த சமுதாயம் வளர வேண்டும் என்பதுதான். மாவீரன் காடுவெட்டியார் மிகப்பெரிய பணிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் பாமக என்கிற ஒரு கட்சியில் இருந்ததால் குறிப்பிட்ட பணிகளுக்கு மேல் அவரால் செய்ய முடியவில்லை. அவர் வன்னியர் சங்க தலைவராக மட்டும் இருந்திருந்தால் இந்த சமூகம் இன்றைக்கு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் வளர்ச்சி பெற்று இருக்கும்.
இப்போதைக்கு கட்சி என்பது எங்கள் நோக்கமல்ல. இந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இன்றைக்கு பாமகவின் கொள்கை என்ன என்பதுதான் எனது கேள்வி? எல்லா சமுதாயத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த சமுதாய விடுதலைக்காக நான் பாடுபட்டு கொண்டிருக்கிறேன்.
இட ஒதுக்கீடு என்ற ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து 30 ஆண்டுகாலம் அரசியல் செய்து அப்பாவி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். அப்பா இறந்த பிறகும் வன்னியர்களை தூண்டி விட்டு கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த விழாவில் அனைத்து பாமக முன்னால் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். என்னுடைய மூத்த பிள்ளை என்று கூறும் தலைவர், அழைப்பு விடுக்கிறார்களா என பார்க்காமல் அவர்தான் அங்கு வந்திருக்க வேண்டும். விழாவை முன்னெடுத்து நடத்தி இருக்க வேண்டும். அப்படி என்றால் அரசியல் லாபத்திற்காக மட்டும்தான் காடுவெட்டியாரை பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
இன்றைக்கு வன்னியர் சங்கம் எங்கே இருக்கிறது என்பதுதான் என் கேள்வி. அது சரியாக இருந்திருந்தால் மஞ்சக்கொல்லையில் நடந்த சம்பவத்திற்கும், பரங்கிப்பேட்டையில் பெண் நிர்வாகிக்கு நடந்த சம்பவத்திற்கும், ராணிப்பேட்டை சம்பவத்திற்கும் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்திருக்கும். இதைப் பார்த்தாலே தெரியும் வன்னியர் சங்கம் இயங்குகிறதா அல்லது யாருடைய கைப்பாவையாக இருக்கிறது என்று.
10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பதையே ஏமாற்றமாகத்தான் பார்க்கிறேன். அருந்ததியர் சமூகத்தினருக்கும், இஸ்லாமிய சமூகத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார்கள். அதுபோல் வன்னியர் சமூகத்தினருக்கும் 10.5 சதவீதம் அல்ல, 13 அல்லது 14 சதவீத இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்து இட ஒதுக்கீடு வழங்குங்கள் என்று கேட்க இருக்கிறோம். இவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. 40 ஆண்டு காலம் அரசியல் நடத்தியவர்கள் 4 வருடமாக அமைப்பு நடத்தும் என்னை பார்த்து பயப்படுகிறார்கள். இதுவே எனது வெற்றிதான். இதற்கு மேல் நான் அவர்களை தோற்கடித்து வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறினார்.