கள்ளச்சாராய வணிகர்கள் குறித்து விசாரணை வேண்டும் – பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்- திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர்..
உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது.
கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது.
அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். கடந்த காலங்களில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போக மறுத்த காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்தது அம்பலமானது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.