யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிந்து விட்டது திருச்சியில் டி ஆர் பாலு பேச்சு
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவருமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். திருச்சி தொகுயில் போட்டியிட நிறைய பேர் விருப்பப்படுகிறார்கள். அதற்கு காரணம் இங்கு நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைந்து பணியாற்றுகிறாகள் என்பது தான்.
அமைச்சர்கள் நேருவும், மகேஷ் இருவரும் படை தளபதியாக இருந்து திருச்சி மாவட்டத்தை வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார்கள்.இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி காக்க சின்னச்சாமி உயிர் நீத்தது திருச்சி மண்ணில் தான்.மோடி பேசுவதை பா.ஜ.க வினர் கேரண்டி என கூறுகிறார்கள்.
2014 ல் மோடி கொடுத்த கேரண்டிகள் என்ன ஆனது கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் என கூறினார் அதெல்லாம் என்ன ஆனது என நாம் கேட்க வேண்டும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என கூறினார் ஆனால் இளைஞர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதை அவர்களிடம் கேட்க வேண்டும்.
பெட்ரோல் ரூ.35 க்கு தருவேன் என்றார் ஆனால் இன்று பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது..எல்லாமே பொய் தான்.விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர வேண்டும் என்கிற சாமிநாதன் குழு பரிந்துரையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
அதற்கு அப்போதைய தலைவராக குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி தான் இருந்தார். அவர் 2011 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே உணவு பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என அதை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்ற பின் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்டம் நிறைவேற்றாமல் மூன்று வேளாண் சட்டங்களை தான் நிறைவேற்றினார்.
அவருக்கு விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்டம் நிறைவேற்ற விருப்பமே இல்லை.பட்ஜெட்டில் 2.67 சதவீதம் தான் விவசாயத்திற்கு ஒதுக்கி உள்ளார்கள்.இன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை தீவிரவாதிகள் போல் ஒன்றிய பா.ஜ.க அரசு நடத்துகிறது. மன்மோகன் சிங் ஆட்சியில் பெட்ரோல் விலை 59 ரூபாய், கேஸ் விலை 400 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல் 102 ரூபாய்குக், கேஸ் 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கேரண்டி என கூறுபவர்கள் இதற்கு பதில் கூற வேண்டும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் 95 சதவீத உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது.மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு தரவில்லை தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை புறக்கணிப்பவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு கவுன்சிலருக்கும் அவர்கள் பகுதிக்குட்பட்ட மக்களை வாக்களிக்க வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்கள் மிகப்பெரிய விரோதிகள்.
முதலமைச்சர் கடுமையாக வேலை செய்து வருகிறார். இவ்வளவு வேலை செய்ய வேண்டாம் என கூறினாலும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார்.முதலமைச்சருக்கு உறுதுணையாக நாம் இருக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் கட்ட ரூ.2000 கோடி பணம் இல்லை என்கிறார்கள். மதுரை எய்ம்ஸ்சை ராமநாதபுரத்தில் நடத்துகிறோம் என்கிறார்கள் அது குறித்து கேள்வி கேட்டால் பாராளுமன்றத்தில் பிரச்சனை செய்கிறார்கள்.
நான் அரசியலுக்கு வந்த போதே மானம், ரோசத்தை விட்டு விட்டேன். வெள்ள நிவாரணம் கேட்டு பிரதமரை சந்தித்தேன்.எதிரிகளிடம் எப்படி பேச வேண்டும் என்பதை முரசொலி மாறன் எனக்கு கற்று தந்துள்ளார்.மோடியிடம் மனுக்களை 10 ஆண்டுகளாக கொடுத்து வருகிறோம்.
அவரிடம் மனு கொடுத்து போட்டோக்கு போஸ் கொடுத்தே போய் விட்டது. எதுவும் நடக்கவில்லை.
மோடியிடம் கொடுத்து நடக்கவில்லை அமித்ஷாவிடம் சென்று மனு கொடுத்தோம். ஜனவரி 27 ஆம் தேதிக்கு முன்பாக நிவாரண நிதி வழங்கப்படும் என்றார் ஆனால் வழங்கப்படவில்லை.
அதனால் நாடாளுமன்றத்தில் அது குறித்து பேசினேன், வெள்ளம் ஏற்பட்ட போது பாதுகாப்பு துறை அமைச்சர், நாட்டின் பிரதமரை பாராட்டுகிறேன் என பேச தொடங்கினேன்.
அதை கூறிய உடன் எல்.முருகன் எழுந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். எல்.முருகன் அதற்கு பதில் சொல்ல கூடாது உள்துறை அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும் என கூறினேன். அதற்குள் வேறு ஒருவர் எழுந்து எல்.முருகன் ஜாதியை பாலு குறிப்பிட்டு விட்டார் என்றார்.1996 ல் பெட்ரோலிய துறை இணை அமைச்சராக நான் இருந்த போது ஒரு இயக்குனராக தலித் இளைஞர் பணியாற்றினார்.
அவரை இணை செயலாளராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினேன் அவர் நியமிக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே ஒன்றிய அரசில் தலித்தை இணை செயலாளராக நியமித்தது அது தான் முதல் முறை. என்னை தலித்தை இழிபுப்படுத்தி விட்டதாக கூறுகிறார்கள்.சமூக நீதி பற்றி கற்று கொடுத்ததே தி.மு.க தான்.
பொது வெளியில் தி.மு.க வை அவமானப்படுத்துவதை ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டேன்.எனக்கு ஜாதி, மதம் கிடையாது. தலில் மக்கள் அதிகம் வசிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்கள் தான் என்னை எம்.பியாக தேர்ந்தெடுத்தார்கள்.பா.ஜ.க கொடுத்த கேரண்டிகளில் ஒன்று சேது சமுத்திர திட்டம். வாஜ்பாய் அதற்கு கையெழுத்திட்டார். 23 கி.மீ மீதமிருந்த நிலையில் ஜெயலலிதா, பா.ஜ.க வினர் நீதிமன்றம் சென்றார்கள் அதனால் அது நிறுத்தப்பட்டு விட்டது.
இன்று நீதிமன்றமே அது பாலமில்லை என கூறி விட்டது தற்போது அதை நிறைவேற்ற வேண்டியது மோடி தான். அவர் நிறைவேற்ற மறுக்கிறார்.2021 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த போது கொரொனா காலக்கட்டத்தில் ரூ.4000 வழங்கினார். மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு நிறைவேற்றி உள்ளது.
ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிலிருந்து 22 லட்சத்திற்கு மேல் ஜி.எஸ்.டி வரியை செலுத்தி உள்ளார்கள் ஆனால் ஒன்றிய அரசு மீண்டும் தந்தது ஐந்து மாநிலத்திற்கும் சேர்த்து 6 லட்சம் தான் தந்துள்ளார்கள்.தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களில் 4.81 கோடி பேர் பயனடைந்துள்ளார்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்கள் 6.20 கோடி பேர் உள்ளார்கள். இதிலிருந்தே யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிந்து விட்டது.முத்துவேல் கலைஞர் நம் நம்பிக்கை, முத்துவேல் கலைஞர் நம் விருப்பம், முத்துவேல் கலைஞர் நம் வெற்றி என பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.