ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் குடியரசு தலைவரிடம் அறிக்கை தாக்கல்
மக்களவை தேர்தலோடு, மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பது, நிர்வாக சிக்கல்களை ஆய்வு செய்வது, நிதி சிக்கல்கள் பற்றி ஆய்வு செய்வது என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஆய்வு செய்து வந்தது.
இந்த ஆய்வறிக்கையை இன்று ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்துள்ளது. மொத்தம் 18,626 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் பவனில் சமர்ப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக PTI செய்தி தளத்தில் வெளியான செய்தி குறிப்பின்படி, ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்தி, அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை 2வது கட்டமாக நடத்தலாம்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான உபகரணங்கள், மனிதவளம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டி செயல்படுத்த வேண்டும். வளர்ச்சி செயல்முறை மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்க ஒரே நேரத்தில் கருத்துக் கணிப்புகள் வெளியிடலாம்.
ஒரே நேரத்தில் நடக்கும் முதல் தேர்தலுக்கு, அனைத்து மாநில சட்டசபைகளின் பதவிக்காலம், அடுத்த லோக்சபா தேர்தல் வரை இருக்கும். ஒருவேளை பெரும்பான்மை இல்லாத தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் இடைத்தேர்தல் வைத்து அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசாங்கம் அடுத்த மக்களவை தேர்தல் வரும் வரை மட்டுமே ஆட்சியில் இருக்கும் என ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த குழு அறிக்கை இன்னும் வெளிப்படையாக கூறப்படவில்லை.