சிதம்பரத்தில் ஜேசிபி எந்திரத்தை நிறுத்தும்போது இடையூறாக நின்ற காரால் மோதல். ஜேசிபி டிரைவரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது. ஆத்திரத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் காரை சேதப்படுத்திய மற்றொரு வாலிபரும் கைது செய்யப்பட்டார்
சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஜேசிபி எந்திரத்தை ஒட்டி வந்து, சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி தெருவில் ஜேசிபி எந்திரத்தின் உரிமையாளரின் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு கார் ஒன்று நின்றுள்ளது. இடையூறாக இருக்கும் காரை எடுக்கச் சொன்னபோது காரில் வந்தவர்களுக்கும், ஜேசிபி டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் சேர்ந்து மகேந்திரனை தாக்கினர். பின்னர் மேலும் ஐந்து பேர் சேர்ந்து எட்டு பேரும் ஜேசிபி டிரைவர் மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்களையும் தாக்கினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு ஜேசிபி ஓட்டுனரின் நண்பரான சிதம்பரம் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் திடீரென ஜேசிபி எந்திரத்தில் ஏறி அதை இயக்கி, ஜேசிபி எந்திரத்தின் மூலம் காரை இடித்து சேதப்படுத்தினார்.
இதில் காரின் மேல் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் ஜேசிபி எந்திரத்தையும், சேதமடைந்த காரையும் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். காரில் வந்தவர்கள் தாக்கியதாக ஜேசிபி டிரைவர் மகேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு, சார்லஸ், சரண்ராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் பொக்லைன் எந்திரம் மூலம் காரை இடித்து சேதப்படுத்தியதாக கூடுவெளிசாவடி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்ஆகாஷ் என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காரை ஜேசிபி எந்திரத்தால் இடித்து சேதப்படுத்திய சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்த விக்னேஷ்(23) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.