திருச்சி திருவெறும்பூர் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபடும் கள்வன்…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன.
குறிப்பாக கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள கட்டுக் கம்பிகள் சென்ட்ரிங் கம்பிகள் மற்றும் இரும்பு தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை நோட்டமிட்டு திருடி செல்வதாக அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே பாலாஜி நகர் 17வது கிராசில் கட்டிட கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூடாரத்திலிருந்து சென்ட்ரிங் கம்பிகள், கட்டுக் கம்பிகள், இரும்பு தளவாட பொருட்கள் ஆகியவற்றை சாக்கு மூட்டையில் பேக்கிங் செய்து அதனை டூவீலரில் திருடிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி கட்சியானது அப்பகுதி இணையத்தில் வைரலானது.
மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதேபோல் சந்தோஷ் நகரில் உள்ள கட்டுமான பணிகள் நடைபெறும் தற்காலிக கட்டிடத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து பொருட்களை திருடி செல்வது போன்ற மற்றொரு சிசிடிவி காட்சியானது வெளியானது.
கடந்த சில நாட்களில் மட்டும் இப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை நோட்டமிட்டு ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த தொடர் திருட்டால் அப்பகுதிமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்மநபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதற்கு காரணம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் போலீசாரின் பற்றாக்குறையே காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பெருகிவரும் குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருவெறும்பூர் காவல் நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் போலீசார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.