தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு அடிப்படை காரணமே காமராஜர் ஆட்சி தான்… முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு
பணம் இல்லாமல் தகுதி,திறமை அடிப்படையில் அரசுப் பணிகளை நிரப்பி இதுதான் காமராஜரின் ஊழல் அற்ற ஆட்சி என்பதை நிரூபித்து இருக்கிறோம் எனவும் ரங்கசாமி பெருமிதம்
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் மாணவர் நாள் விழா புதுச்சேரி முருங்கப்பாக்கம் அரசு பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர்
புதுச்சேரியில் நியாய விலை கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்பட உள்ளது என்றார்.
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும் போது காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று தான் கூறுகிறார்கள். காமராஜர் ஆட்சியை கொண்டு வந்தால் மாநிலத்திற்கு நல்லது என்று கூறுகிறார்கள்.
அது ஏனென்றால் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகின்ற ஆட்சி, மக்களுக்காக செயல்படும் ஆட்சி, ஊழல் அற்ற ஒரு நல்லாட்சி இதுதான் காமராஜரின் ஆட்சி என்று பெருமிதமாக குறிப்பிட்டார்.
இன்று தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு அடிப்படை காரணமே காமராஜர் ஆட்சிதான் தான் என்று குறிப்பிட்ட ரங்கசாமி அப்படி ஒரு நல்ல ஆட்சி வரவேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பம் அந்த அடிப்படையை உருவாக்கியதே காமராஜர் தான் என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராஜர் இருந்த போது கட்சியை நல்வழிப்படுத்தினார். பிரதமரோடு தொடர்பில் இருந்தார் அவர் எடுக்கும் முடிவுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது என்று குறிப்பிட்ட ரங்கசாமி..யாருக்குமே இல்லாத ஒரு பெயர் காமராஜருக்கு இருந்தது அதுதான் கல்விக்கண் திறந்த காமராசர் என்ற பெயர்…
பெருந்தலைவர் காமராஜர் வழியில் ஊழல் அற்ற நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் என்று குறிப்பிட்ட அவர் புதுச்சேரியில் மாணவர்களுக்கு அரசு சார்பில் சிறந்த கல்வி கொடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் எளிதாக கல்வி கற்கக் கூடிய ஒரு சூழலை புதுச்சேரியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பள்ளி படிப்பு முதல் பொறியியல் மருத்துவக் கல்லூரி வரை மாணவர்கள் படிக்கின்ற சூழ்நிலையை புதுச்சேரி அரசு உருவாக்கி உள்ளது என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான அரசு பணிகள் நிரப்பப்பட்டு வருகிறது. பணம் கொடுத்து தான் அரசு வேலை வாங்கினேன் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர்… யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு அரசு பணி கிடைக்கிறது என்று குறிப்பிட்டார்.இதுதான் காமராஜர் கனவு கண்ட ஆட்சி ஊழல் இல்லா ஆட்சி என்று பெருமை பட தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.