பல்வேறு தேடுதலுக்கு பின் மனைவியிடம் கணவரை ஒப்படைத்த காரைக்கால் போலீசார்
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை இழந்ததால் மது போதைக்கு அடிமையாகி காரைக்காலில் சுற்றித்திரிந்த தொழிலாளி. பல்வேறு தேடுதலுக்கு பின் மனைவியிடம் கணவரை ஒப்படைத்த காரைக்கால் போலீசார்.
காரைக்கால் நகரில் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வந்துள்ளார். சரியான உணவு அருந்தாததால் சுய நினைவு இல்லாமல் இருந்த அவரை அன்னை பவுண்டேஷன் இளைஞர்கள் மீட்டு உணவு உடை கொடுத்து, முடி வெட்டி முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை விசாரித்த காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன், தகவல் கிடைக்காததால் காரைக்கால் அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனிடையே ஆதார் சேவை மையத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர் அழகுமலை கண்ணன் என்பது தெரியவந்தது.
இதனை எடுத்து பத்து நாட்கள் முயற்சிக்கு பிறகு அவரது குடும்பத்தை கண்டறிந்து தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அழகுமலையை மனைவி செல்வியிடம் ஒப்படைத்தனர். கணவனை கண்ட மனைவி கண்ணீர் மல்க பிடித்துக் கொண்டார்.
அழகுமலை பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வேலை இழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.
பிள்ளைகள் படிப்புக்கு உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுங்கள் என நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் அவர்களிடம் தெரிவித்தார். போலீசாரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.