குவாட்டருக்காக கொலை: தீபாவளி பண்டிகையன்று மது போதையில் உளறிய கொலைகாரர்கள்: ஒரு வருடத்திற்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டு எலும்புக்கூடு: சம்பை கிராமத்தில் பயங்கரம்:
ராமேஸ்வரம் அடுத்த சம்பை கிராமத்தில் குவட்டர் பாட்டிலை திருடிய நபரை கொலை செய்த இருவர் கைது. தீபாவளி அன்று மது போதையில் உளறியதால் வெளிவந்த உண்மையையடுத்து ஓராண்டுக்கு பின் எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்து சம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (39). இவர் சம்பை நரிக்குழி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பாசி வளர்ப்பு மற்றும் நாட்டுப்படகில் மீன்பிடி சிறுதொழில் செய்து வந்தார்.
விஜயகுமாரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதியில் இருந்து முதல் காணவில்லை. விஜயகுமாரை கண்டுபிடித்து தருமாறு அவரது அண்ணன் குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்
அதன் அடிப்படையில் போலீசார் சம்பை பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் உறவினர்களான முத்துக்குமார் உட்பட சிலரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையில் போதிய தகவல் கிடைக்காததால் கடந்த ஓராண்டாக விஜயகுமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சம்பை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (24) கடந்த 31ஆம் தேதி தீபாவளி அன்று மது அருந்தும் போது சக நண்பர்களிடம் கடந்த ஆண்டு விஜயகுமார் குவட்டர் பாட்டிலை திருடியதற்காக கொலை செய்ததாக உளறியுள்ளார்.
முத்துக்குமாருடன் மது அருந்தியதில் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் புதன்கிழமை முத்துக்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது முத்துக்குமார் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
முத்துக்குமாரிடம் போலீசார் நடத்தி விசாரணையில் சம்பை கிராமத்தில் நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் செய்யும் முத்துக்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் ஆகிய இருவரும் சம்பை மீனவ கிராமத்தின் கடற்கரை அருகே வனத்துறைக்கு கட்டுபாட்டில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து அந்த குடிசையை மது அருந்துவதற்கும், அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கும் பல மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் குமார் மீன்பிடி தொழிலை முடித்துவிட்டு முத்துக்குமாரின் குடிசைக்குள் இருந்த குவாட்டர் பாட்டில் ஒன்றை திருடி குடித்துள்ளார். இது குறித்து தகவல் தெரிய வந்த முத்துக்குமார் விஜயகுமாரிடம் மது பாட்டில் காணாமல் போனது குறித்து கேட்டபோது விஜயகுமார் மதுபாட்டிலே எடுத்ததை ஒப்புக்கொண்டதுடன் தன்னை அடித்தால் அடர்ந்த காட்டுப்பகுதியில
குடிசை அமைத்து மது அருந்துவதையும் அசைவம் சமைத்து சாப்பிடுவதையும் போலீஸிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி விஜயகுமாருக்கு போன் செய்து மது பாட்டில் வாங்கி வைத்திருப்பதாகவும், அசைவம் சமைத்து வைத்திருப்பதாகவும் காட்டுப் பகுதியில் உள்ள தனது குடிசைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அங்கு சென்ற விஜயகுமார் மது அருந்தி கொண்டிருக்கும்போது முத்துக்குமார் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் வேலி கம்பியை கொண்டு விஜயகுமாரை கட்டி வைத்து விட்டு “இந்த வாய் தானே எங்க குவாட்டரை குடித்தது” என கூறி் சரமாரியாக வாய் மற்றும் கழுத்தில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் உயிரிழந்தார்.
இதையடுத்து முத்துக்குமார் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் உயிரிழந்த விஜயகுமாரின் உடலை அந்த குடிசையில் இருந்து சுமார் 5 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று அப்பகுதியில் வனத்துறையினரால் தோண்டப்பட்டிருந்த பெரிய குழிக்குள் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து விஜய் குமாரின் அண்ணன் குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி தனது தம்பியை காணவில்லை என ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் முத்துக்குமாரிடம் விசாரித்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த முத்துக்குமார் போலீஸ் மோப்ப நாய் தங்களை காட்டி கொடுத்து விடும் என்பதற்காக அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள குழிக்குள் வீசப்பட்ட விஜயகுமாரின் உடலை எடுக்கச் சென்றுள்ளார்.
ஆனால் உடல் வீசப்பட்டு ஒரு வருடம் ஆனாதால் உடல் அழுகி எலும்புக்கூடுகள் மட்டுமே இருந்துள்ளது.
இதையடுத்து எலும்புக்கூடுகளை சேகரித்த முத்துக்குமார் மற்றும் சஞ்சஜ் இருவரும் ஒரு கைலியில் அந்த எலும்புக்கூடுகளை சேகரித்து அருகே உள்ள கடலில் வீசியதாக போலீசாரிடம் முத்துக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வியாழக்கிழமை முழுவதும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து எலும்புகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எலும்புகள் கிடைக்காததால் நேற்று வெள்ளிக்கிழமை முத்துக்குமார் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் அழைத்து சென்று எலும்புக்கூடுகளை சேகரித்தனர்
விஜயகுமார் கொலை வழக்கில் முத்துக்குமார் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குவட்டர் பாட்டில் திருடியதால் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் சம்பை மீனவ கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை செய்துவிட்டு ஒரு வருடமாக அதே ஊரில் ஒன்றும்மே நடக்காததை போல் முத்துக்குமார் மற்றும் சஞ்சய் இருவரும் வாழ்ந்து வந்ததை நினைத்து வியப்படைந்துள்ளனர்.