முத்தியால்பேட்டையில் இயங்கிவரும் வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வாசவி பள்ளியில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மழலையர் பட்டமளிப்புவிழா வெகுசிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் நளினி அவர்கள் வருகை தந்திருந்தார். சிறப்பு விருந்தினர், பள்ளி முதல்வர் மாரிமுத்து அவர்கள், துணை முதல்வர் டாக்டர். செந்தில்ராஜ் அவர்கள் மற்றும் தலைமை ஆசிரியை சுஜாதா அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பள்ளி முதல்வர் வரவேற்புரை வாசித்தார். தலைமை ஆசிரியை மழலையர் வகுப்பிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர் யஷ்வந்த் குப்தா, மழலையர் சார்பாக தனது உரையில் கலை ஒருங்கிணைப்பு கல்வி, வாழ்க்கைக்கல்விக்கான பகிர்தல், அன்பு, ஒன்றுபடுதல் போன்ற பல வழிகளிலும் தன் கல்வியையும் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும் மிகச் சிறப்பாக நினைவுகூர்ந்ததோடு தனது ஈராண்டு கற்றல் அனுபவத்தை உரையாக நிகழ்த்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளில் உணவே மருந்து’ என்னும் தலைப்பில் சிறுதானிய உணவு பற்றிய நாடகம் நடத்தப்பட்டது. சிறு தானிய உணவு பற்றிய உரையாடல் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் அமைந்திருந்தது. உழவுத் தொழிலின் சிறப்பு பற்றிய நடனம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாநில பண்டிகைகள் மற்றும் பாரம்பரிய நடனத்தில் மணிப்பூரின் மூங்கில் நடனத்தில் மாணவர்கள் காண்போர் வியக்கும் வண்ணம் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். இயற்கையின் அங்கமான ஐம்பூதங்களின் வடிவ அசைவுகளை மாணவிகள் நடனத்தில் வெளிப்படுத்தியது, சிறப்பம்சமாக இருந்தது.
பத்ம ஸ்ரீ டாக்டர் நளினி அவர்கள் சிறப்புரையில், தாய்மொழி வழி கல்வியை பற்றியும் குழந்தைகளுக்கு மூத்தோர்களின் அரவணைப்பின் அவசியம் பற்றியும் கற்றல் வழியில் கதை சொல்லும் ஆற்றலை வளர்ப்பதில் குழந்தைகளின் வளர்ச்சி அடங்கி உள்ளது என்பதை பற்றியும் பெற்றோர்களுக்கு வலியுறுத்தினார். பெற்றோர்கள் தரும் உயர்ந்த பரிசுகளை விட பெற்றோர்களின் நெருக்கத்தை குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதையும் தனது உரையில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். ஆசிரியை மாலதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.