in

தஞ்சை பெரிய கோவிலில் துவங்கிய கிரிவலம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..

தஞ்சை பெரிய கோவிலில் துவங்கிய கிரிவலம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..

 

பொதுவாக பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வாய்ந்தாகும். அம்பிகைக்கு உகந்த பௌர்ணமி நாளில் சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து அவருடைய திருப்பெயரை உச்சரித்துக் கொண்டு பொறுமையாகவும், அமைதியாகவும் நடந்து செல்வதன் மூலம் சிவபெருமானின் ஆசி நேரடியாக கிடைப்பதோடு பாவங்கள் நீங்கி சகலதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் சிவபெருமானின் அருளைப் பெற திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரிய கோவிலில் ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு கிரிவலம் நடந்துள்ளது. அதன் பிறகு பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று தஞ்சை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கிரிவலம் நடத்துவதற்காக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலைப் போல மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளன்று மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை 6:00 மணி வரையும் கிரிவலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது‌. கிரிவலப் பாதைக்காக பெரிய கோவிலை சுற்றி உள்ள நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புரட்டாசி முதல் பௌர்ணமி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி பெரிய கோவிலில் வெகு விமர்சையாக கிரிவலம் துவங்கப்பட்டது.

பொதுவாக பெரிய கோவிலுக்கு இரவிலும் கூட தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் முதல் பௌர்ணமி கிரிவலம் நாளிலே முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி ஏராளமான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில்..

நாங்கள் திடீர் முடிவில் இதை செயல்படுத்தியுள்ளோம். கோவிலை சுற்றியும் உள்ள புல், பூண்டு, புதர்களை மூன்றே நாட்களில் 100 மாநகராட்சி பணியாளர்கள், மற்றும் புல்டோசர் ஆகியவற்றை கொண்டு சரி செய்துள்ளோம். கோவிலை சுற்றிலும் வாய்க்கால்கள், ஆறுகள் இருப்பதால் முழுவதும் கம்பி வேலிகளால் அடைத்துள்ளோம். மாலை 5 மணி முதல் காலை 6:00 மணி வரை நீண்ட நேரம் பக்தர்கள் கிரிவலம் செல்வதால். அவர்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தியுள்ளோம். போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் நினைத்தது பத்தாயிரம் பேர் வருவார்கள் என ஆனால் இரவு 9:00 மணிக்கே கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். மொத்தமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.

இனி அனைத்து மாதங்களிலும் வரும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலமானது நடைபெறும்.. அடுத்தடுத்த பௌர்ணமி கிரிவளத்தில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவையான வசதிகளை ஏற்படுத்துவோம். கிரிவலத்திற்கு சிறப்பு பாதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவிலில் எப்போதும் போல 8.30 மணிக்கு பூஜை நடைபெற்று நடை சாத்தப்படும். அதேபோல கிரிவலம் செல்பவர்கள் 8.30 மணிக்கு முன்பே வந்து பெருவுடையாரை தரிசிக்கலாம் என்று கூறினார்.

What do you think?

அரசு பேருந்தை மறித்து ..சாலையில் படுத்து மறியல்..

தெலுங்கானா முதலில் கண்டெய்னர் பள்ளி இப்போது கண்டெய்னர் மருத்துவமனை