நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே மனித கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு. திட்டத்திற்கான டெண்டர் விடும் பணியை தொடங்கினால் கடையடைப்பு மற்றும் ஊர் பொது மக்களை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் பிரதிநிதிகள் அறிவிப்பு.
நெல்லை மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும் அதன் கீழ் 204 ஊராட்சி மன்றங்களும் செயல்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் வின்சி மணியரசி இவரது தலைமையில் கூடங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் 20க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து ஆட்சியரை சந்தித்து தங்களது பகுதியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் காற்று மாசுபாடு நீர் மாசுபாடை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படும் மனித கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
அதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளதாவது நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூடங்குளம் ஊராட்சி பகுதியில் சுமார் 20000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . இந்த ஊராட்சியின் வடக்கு பகுதியில் கூடங்குளம் கிராம குடிநீர் ஆதாரம் அரசு மேல்நிலைப்பள்ளி அரசு பொது மருத்துவமனை அணுமின் நிலையத்தின் நிர்வாகம் அமைத்த அணுசங்கமம் மஹால் திருமண மண்டபம் வழிபாட்டு தலங்கள் விவசாய விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளது. கூடங்குளம் கிராமத்தின் பொதுமக்களின் வசதிக்காகவும் சிறுவர்களின் வசதிக்காகவும் சுமார் 1.5 ஏக்கர். நிலம் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் சுமார் 3 கோடி மதிப்பில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மனித கழிவு மேலாண்மை திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது அதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் பெரும் பகுதியாகவும் அதிகம் பேர் வசிக்கும் பகுதியாகவும் இருந்து வருகிறது.
கிராம ஊராட்சியான கூடங்குளம் பகுதியில் மனிதக் கழிவுகள் அதிக அளவு சேராத நிலையில் மாவட்டத்தில் உள்ள மற்ற மாநகராட்சி நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளை கூடங்குளம் பகுதிக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்வதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.இது முறையானது அல்ல. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் காற்று மாசுபாடு நீர் மாசுபாடு ஏற்படும் சூழல் உருவாகி கூடங்குளம் பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்படும் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மனிதக் கழிவு மேலாண்மை மையத்தை கூடங்குளம் ஊராட்சியில் அமைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.என ஊராட்சி மன்ற தலைவர் வின்சி மணியரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும். இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக டெண்டர் விடும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டால் வரும் சனிக்கிழமை வியாபரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தவும் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.