தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோயில் நவராத்திாி தசரா திருவிழா. நள்ளிரவில் கடற்கறையில் மகிஷ சம்ஹாரம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தா்கள் தாிசனம்.
மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிணம் எனும் கடற்கரை கிராமத்தில் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
வெயில் காலங்களில் பக்தா்களின் உடலில் ஏற்படும் முத்து போன்ற கொப்பளங்களை தனது அருளால் ஆரவைத்ததால் முத்தாரம்மன் என பெயா் பெற்ற இந்த அம்மனை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும். வேண்டுதலுக்காக விரதம் இருக்கும் பக்தர்கள் காளி,அம்மன்,விநாயகா்,முருகன் போன்ற தெய்வஉருவங்களையும் ,புலி,கரடி,குரங்கு போன்ற விலங்கு உருவங்களையும் வேடமாக அணிந்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் வீதி வீதியாக சென்று மடிபிச்சை எடுப்பா். இந்த பணத்தை ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயிலில் காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவா்.
சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 3ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பத்து நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் காலையில் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் , தினமும் இரவில் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. திருவிழாவின் 10ம் நாளான நேற்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி இரவில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதனை தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் அம்மன் சிம்ம வாகனத்தில் காளி அவதாரத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக எழுந்தருள மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மகிஷன் ஆணவத்துடன் போருக்கு வர அம்பாள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட சூலாயுதத்தால் அசூரனின் தலையை எடுத்தாா். தொடா்நது அசுரன் சிம்ம முகமாகவும் அதன் பின் மகிஷ முகம் (ஏருமை தலை) கொண்டு ஆக்ரோஷத்துடன் தொடா்ந்து போா்புாிய அம்பாள் கோபத்துடன் மகிஷனை சம்ஹாரம் செய்தாா். மகிஷ வதம் முடிந்ததும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கடற்கரையில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி கோஷம் முழங்க அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி தமிழகம், கேரளா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், கார், வேன், லாரிகளில் தனித்தனியாகவும், குழுக்களாகவும் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர்.