குளித்தலை 1200 பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா
குளித்தலை 1200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்குப் பின்னர் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலையில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலானது முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். மேலும் இது பல்லவர் கால கட்டட கலையுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த இக்கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.
கடந்த ஜனவரி 30ஆம் தேதி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
புனிதநீர் அடங்கிய கும்பத்தினை பட்டாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை, திரவியாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
இன்று காலை 4ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை பட்டச்சாரியர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.
அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள், பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூலவருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
குளித்தலையை சுற்றியுள்ள திருவன பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் முழங்க சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.