நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் சூரியனார்கோயில் சிவசூரியப்பெருமான் திருக்கோயில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம் பாலஸ்தாபனம், திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு.
நவகிரக கோயில்களில் பிரதானமாகவும் சூரியபகவான் பரிகார ஸ்தலமாகவும் தமிழகத்தில் நவகிரகங்களுக்கு என்று தனித்தனியே சன்னதிகள் அமைந்துள்ள ஒரே ஸ்தலமாகவும். திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் விளங்கும் சூரியனார் கோயில் அருள்மிகு உஷாதேவி சாயாதேவி உடனாகிய சிவசூரியப்பெருமான் திருக்கோயிலில் கோள்வினைதீர்த்த விநாயகர், மூலவராக உஷாதேவி சாயாதேவி உடனாகிய சிவசூரியப்பெருமான், இராகு, கேது, சனீஸ்வரன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குருபகவான் உள்ளிட்ட நவகிரகங்களுக்கு தனி சன்னதிகள் கொண்டு விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தியும், சூரியன் உள்ளிட்ட நவகிரகங்களுக்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடுவதும் வழக்கம்.
இத்தகு சிறப்புடைய இத்திருக்கோயிலில் 36ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டு திருப்பணி பாலஸ்தாபனம் கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜைகளும் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகளும், கோயிலின் மகா அபிஷேக மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் புனித தீர்த்த கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகளும், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர் நான்காம் கால யாக பூஜை பூர்ணாஹூதியுடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலின் மூலவராக விளங்கும் உஷா தேவி பிரதியுக்க்ஷா தேவி சமேத ஶ்ரீ சிவசூரியப்பெருமான், மற்றும் நவகிரக விக்ரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பாலஸ்தாபனம் நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளைதம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் சிவசூரியபெருமான் சன்னதி, குரு பகவான் சன்னதி, மகா மண்டபம், முன் மண்டபகங்கள், பிரகார மண்டபங்கள், திருமாளிகைப் பத்தி மண்டபங்கள், கோள்வினை தீர்த்த விநாயகர் சன்னதி, முகப்பு ராஜகோபுரம், உள் வெளி மதில் சுவர்கள் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் திருப்பணிகளும், கருவறைக்கு வெளி சுற்றில் உள்ள மற்ற நவக்கிரக சன்னதிகள், தேஜஸ் சண்டிகேஸ்வரர் சன்னிதி புதிதாக கருங்கல் திருப்பணிகளாகவும், உள் வெளி பிரகாரங்கள் கருங்கள் தளவரிசை அமைக்கும் பணிகளும் செய்திட அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் இவ்விறைப்பணியில் பங்குபெற்று எல்லா வளமும் பெற்றிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.