ஏழு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலுக்கு உட்பட்ட ஏழு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 78 சென்ட் நிலத்தை அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பகுதியில் அமைந்துள்ளது சௌந்தரவள்ளி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோவில்.
இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் திருநெல்வேலி மாவட்டம் கீழ வீரராகவபுரம் கிராமம் கொக்கிரகுளம் பகுதியில் சுமார் 4 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நிலம் அமைந்துள்ளது. இதில் 78 சென்ட் நிலத்தினை பாலையா என்பவர் பயன்படுத்தி வந்ததாகவும் அதற்கான பணம் செலுத்தாமல் காலதாமதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
நிலத்தை உபயோகிப்பதற்கான பணத்தை செலுத்த கோரி கோவில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் எந்த பதிலும் கிடைக்க பெறாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் பாக்கி ரூபாய் 4 லட்சத்திற்கும் மேல் ஆன நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் பிரிவு 78 79 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றம் நிலத்தினை சுவாதீனம் செய்து கொள்ள உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிலத்தினை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் கையகப்படுத்தியது. உடன் சம்பந்தப்பட்ட நிலத்தினை சுற்றி வேலி அமைத்து சீல் வைத்து அதற்கான உத்தரவு நகலையும் விளம்பர பதாகையாக அந்த இடத்தில் வைத்துள்ளனர் மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய் 7 கோடியே 80 லட்சம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.