இந்த ஆட்சியில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை பின்பக்கமாக ஓடிவிடலாம் என தெரிவித்திருந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது பாஜக வேட்பாளர் பிரச்சார வாகனத்தில் சங்கடப்பட்டு ஏறி செல்கிறார் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து 31ம் தேதி வில்லியனூர், மரப்பாலம், அண்ணாசிலை சந்திப்பில் பிரசாரம் செய்யவுள்ளார். அதேபோல் 7 ம் தேதி உப்பளத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்து சென்றார். ஆனால் அதற்கு பதில் இப்போது ஒர்ஸ்ட் புதுச்சேரியாகிவிட்டது.
ஏன் ரேஷன் கடையை கூட அரசால் திறக்க முடியவில்லை என்றார்.
நிதி பற்றாக்குறை மாநிலமாக புதுச்சேரி மாற்றப்பட்டுவிட்டது. காரைக்கால் துறைமுகம் அதனானி துறைமுகமாக மாறிவிட்டது.
அதனால் புதுச்சேரிக்கு கொடும் செயல்களை பாஜக செய்து வருகிறது.
மின்துறை தனியார்மயம் ஆக்குகிறார்கள்.
இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். முதல்வர் ரங்கசாமி சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு செயலர்கள் முன்னிலையில், இந்த ஆட்சியில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை பின்பக்கமாக ஓடிவிடலாம் என தெரிவித்தார். அந்தளவுக்கு பாஜக ரங்கசாமிக்கு தொல்லை கொடுத்தது. ஆனால் தற்போது முதலமைச்சர் ரங்கசாமியின் நிலைமையை பார்க்கும்போது பாஜக வேட்பாளர் பிரச்சார வாகனத்தில் சங்கடப்பட்டு ஏறி செல்கிறார். மக்கள் அவரிடம் நியாயம் கேட்கிறார்கள். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை என சிவா தெரிவித்தார்