சிதம்பரம் அருகே காவல்துறை சார்பில் ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிதம்பரம் அருகே காவல்துறை சார்பில் ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கருத்தரங்கம். கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்று உரையாற்றினார்
கடலூர் மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து ஒன்றிணைவோம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அர்ச்சுனன், பொருளியல்துறை தலைவர் அறிவழகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் நல்லதுரை, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராமதாஸ், லாமேக், போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், வழக்கறிஞர், திருமார்பன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இந்த கருத்தரங்கில் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பேசியதாவது.
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சமமாக நடத்த வேண்டும். அப்படி நடத்தாவிட்டால் அதுதான் தீண்டாமை. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், திருநங்கைகள் போன்றவர்களை பார்த்தால் நாம் தீண்டத்தகாதவர்களைப் போல பார்க்கிறோம். கிராமப் பகுதிகளில் பொதுப் பாதையை தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது போன்ற தீண்டாமை இருக்கிறது.
செருப்பு அணிந்து செல்லக்கூடாது. துண்டு அணிந்து செல்லக்கூடாது என்பதும் தீண்டாமைதான். தீண்டாமை பொது சுவர் சில இடங்களில் இருக்கிறது. பொது குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பன போன்ற செயல்களும் தீண்டாமைதான். எல்லோரும் சமம்தான். எல்லோரும் ஒன்றுதான் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காவல்துறையில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அந்த பிரிவின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என எஸ்பி ஜெயக்குமார் பேசினார்.