பழனியில் தீயாய் பரவும் கடிதங்கள் பாஜக நிர்வாகிக்கு இடையே பஞ்சாயத்து
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவி செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தார்.
கடந்த மாதம் காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைதாகி சிறை சென்ற மகுடீஸ்வரன் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாவட்ட தலைவர் கனகராஜ் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் ரேக்ளா பந்தயம் நடத்துவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் கூறி தொழில் நிறுவனங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட பாஜக பொருளாளர் ஆனந்த் என்பவர் மகுடீஸ்வரனுக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டு உள்ளார். அந்தக் கடிதத்தில் பாரதிய ஜனதா கட்சி பெயரை பயன்படுத்தி ரேக்ளா பந்தயம் நடத்தப் போவதாகவும், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட போவதாகவும் கூறி ஒரு கோடிக்கு மேல் பணம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது.
இந்த கடிதம் கிடைத்து ஏழு நாட்களில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் மாவட்டம் என்ற வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் . உரிய ஆவணங்களை மாவட்ட பொருளாளர் ஆனந்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக மாவட்ட பொருளாளர் ஆனந்த் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .
இந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் வசூல் செய்ததாக வந்த புகார் அடிப்படையில் பாஜக மாவட்ட பொருளாளர் விளக்கம் கேட்டதுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் ,நான் கட்சியில் சேரும் முன்னே எனது மனைவி புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார் என்றும் கட்சியில் எனது சொந்த பணத்தை தான் செலவு செய்து வந்துள்ளேன் என்றும், தன் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக கடிதம் என் மீது அனுப்பப்பட்டுள்ளதாகவும், பாஜக மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் சேரும் முன்பு இருந்த சொத்தையும் தற்போது உள்ள சொத்தையும் மதிப்பிட்டு பார்த்தால் தெரியும் என பரபரப்பான ஒரு குற்றச்சாட்டையும் அந்த விளக்க கடிதத்தில் முன் வைத்துள்ளார், அந்த கடிதத்தை பொருளாளர் ஆனந்த் திரும்ப பெறாவிட்டால் நீதிமன்றத்தில் மான நஷ்ட தொடர்வேன் என்றும் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
பழனியில் இருவரது கடிதங்கள் சமூக வலைதளங்களில் பரவி பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.