தேசிய அளவில் டெல்லியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 13 தங்கம் வென்ற மதுரை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள்
புதுதில்லியில் அகில இந்திய கராத்தே NKF (National Karate Federation) போட்டி கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் மத்திய பிரதேசம், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட 14 மாநிலங்களை சேர்ந்த 1000 கராத்தே வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிக்கு முன்னதாக கேரளா, கர்நாடகா என தென்னிந்திய அளவிலான தேர்வு போட்டிகள் நடைபெற்றுள்ளது.
இதில் வெற்றி பெற்று தேர்வான கராத்தே வீரர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை மற்றும் தென்னிந்திய அளவில் இருந்து சுமார் 13 கராத்தே வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற மதுரை மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்த 13 பேரும் இந்த கராத்தே போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 13 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் வென்றுள்ளனர்.
டெல்லியில் இருந்து பதக்கங்களுடன் ரயில் மூலமாக மதுரை வந்தடைந்த வீரர்களுக்கு மதுரை ரயில் நிலையத்தில் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற வீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், சக வீரர்கள் என அனைவரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.