காஞ்சிபுரம் நகரில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாக விளங்க கூடிய ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளக்கடி கோவில் தெருவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாக விளங்க கூடிய விளக்கொளிப் பெருமாள் கோயில் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
பிரம்மாயாகம் செய்த போது ஏற்பட்ட இருளை நீக்கிடவும்,யாகத்தை இடையூறு இல்லாமல் நடத்தவும் பிரம்மன் பெருமாளை சரணடைந்தார்.அந்த நேரத்தில் பெருமாள் விளக்கொளியாய் அவதரித்து யாகம் சிறப்பாக நடைபெற உதவி செய்ததால் இப்பெருமாளுக்கு விளக்கொளிப் பெருமாள் என்றும் திபப்பிரகாசர் என்றும் பெயர் உண்டானது.
இக்கோயில் கொடிமரம் உட்பட ஆலயம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்போஷணம் நடைபெற்றது. சம்ப்ரோஷணத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.இதன் தொடர்ச்சியாக 5 வது நாளாக யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு மகா சம்ப்ரோஷணம் பட்டாச்சாரியார்களால் நடைபெற்றது. கும்பாபிஷேகம் காண வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு கலசத்தில் உள்ள புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்பு கோவில் கொடி மரத்திற்கு தங்கமூலம் பூசப்பட்ட கவசம் அணிவிக்கப்பட்டு கொடி மரத்திற்கு தீபா தூபா ஆராதனைகள் உடன் பூஜை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை காண வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.