மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி பெருவிழா
மூன்றாம் நாள் வெள்ளி மயில் வாகனத்தில் சேவல் கொடி ஏந்தி ஸ்ரீ சண்முகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகர் வெள்ளி மயில் வாகனத்தில் ஒரு கையில் சேவல் கொடி மற்றொரு கையில் வெள்ளி வேல் ஏந்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகருக்கு மகாதீபாராதனை நட்சத்திர தீபம், கும்ப தீபம்,சத்திரங்கள் கொண்டு சொடச உபச்சாரம் , பஞ்சமுக தீபாரதி கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருடந்தோறும் ஐப்பசி மாத அமாவசையை அடுத்த பிரதமை திதியன்று கந்த சஷ்டி பெருவிழா ஆரம்பிக்கிறது. இந்த நாள் முதல் ஆறு நாட்கள் வரை கந்த சஷ்டி விரதம் அனுசரிக்கப்படும்.
ஆறு நாட்கள் கழித்து சஷ்டி திதியன்று சூர சம்ஹாரம் நடைபெறும். அசுரன் சூரபத்மனை முருகக் கடவுள் சம்ஹாரம் செய்யும் சம்பவமே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழா ஆறு நாட்களில் முருக பக்தர்கள் பல்வேறு வகையில் விரதமிருந்து இறைவனை சரணடைந்து பல்வேறு கோரிக்கைகளை மனதில் வைத்து வழிபடுவார்கள்.
முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி கொண்டாடப்பட்டாலும், திருச்செந்தூரில், அது சூரசம்ஹாரம் நடந்த இடம் என்பதால், கந்த சஷ்டி விழா மிக விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.