கும்பகோணத்தில் வைணவத்தலங்களில் மாசிமக பிரமோற்சவ திருத்தேர்
கும்பகோணத்தில் வைணவத்தலங்களில் மாசிமக பிரமோற்சவத்தின் 9ம் நாளான இன்று, சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சுதர்சனவள்ளி மற்றும் விஜயவள்ளி தாயார் சமேத சக்ரபாணிசுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருள, ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்திழுக்க, மாசிமக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணத்தில் மாசிமகப்பெருவிழா 12 சைவத்திருக்கோயில்கள் மற்றும் 5 வைணவத்திருக்கோயில்கள் இணைந்து பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,
வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் மற்றும் கௌதமேஸ்வரர் என 5 சைவ திருக்கோயில்களில் கடந்த மாதம் 3 ஆம் தேதியும் சக்ரபாணி, ராஜகோபாலசுவாமி மற்றும் ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று வைணவ திருக்கோயில்களில் கடந்த 4 ஆம் தேதியும் இவ்வுற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலாவும் நடைபெற்றது .
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வைணவ தலங்களில் 9ம் நாளான விழாவாக, மாசிமகத்தினை முன்னிட்டு சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சுதர்சனவள்ளி மற்றும் விஜயவள்ளி தாயார் சமேத சக்ரபாணிசுவாமி நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருள, ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்திழுக்க, மாசிமக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து, ராஜகோபாலசுவாமி மற்றும் ஆதிவராகப்பெருமாள் திருக்கோவில் கட்டு தேரோட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் நிறைந்தபடி தேரை வடம் பிடித்து இழத்து வருகின்றனர்.