மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்.
இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அம்மாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை கான தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிக அளவு கலந்து கொண்டு அம்மனை மனமுருகி வேண்டுவர்.
இந்நிலையில் நேற்று இரவு வைகாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் பலவித மலர்களை கொண்டும் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.
தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு தங்க ஆபரணம் நகைகளாலும் பல வகை மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஏழிலரசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அமாவாசை தினத்தில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன் நள்ளிரவில் கோயில் பூசாரிகள் வடக்குவாசல் வழியாக மேளதாளங்கள் முழங்க அம்மன் ஊஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று மாலை முதலே லேசான மழை பெய்து கொண்டிருந்தது ஊஞ்சல் உற்சவ விழாவில் மழையிலும் பக்தர்கள் கையில் தேங்காய் மற்றும் எலுமிச்சம்பழம்த்தில் சூடம் ஏற்றி அங்காளம்மா தாயே … அருள் புரிவாயே… என கோசங்கள் எழுப்பி வணங்கினர்.
இந்நிகழ்வில் விழுப்புரம்.மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி மற்றும் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனிடம் மனம் உருகி கையில் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
விழாவுக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.