மீன் உற்பத்தியினை அதிகரித்திட 3 வகையான மீன்குஞ்சுகளை உயர்கல்வித்துறை அமைச்சர் குளத்தில் விட்டார்
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ், மன்னார்சாமி குளத்தில் 3 வகையான மீன்குஞ்சுகளை உயர்கல்வித்துறை அமைச்சர் குளத்தில் விட்டார்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் கடந்த ஜூன் 22-ம் தேதி கிராமப்புரங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களின் மீன் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தும் வகையில் 5000 ‘ஹெக்டேர் பரப்பளவுள்ள ஊராட்சிக் குளங்களில் ஒரு ஹெக்டேருக்கு 2000 மீன்குஞ்சுகள் வீதம் 1 கோடி மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் உள்ள மன்னார்சாமி குளத்தில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், கலந்து கொண்டு குளத்தில் கட்லா, ரோகு, மிருகால் ஆகிய 3 வகையான மீன்குஞ்சுகளை வளர்ப்பதற்காக விட்டார். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஜிகேஎம் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல், ஊராட்சி செயலாளர் ராஜன் பாபு, ஊராட்சி உறுப்பினர் லதா ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சாமிதுரை, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புகழேந்தி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், ஆய்வாளர்கள் ஆனந்தன், ஆனந்த், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்த போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 150 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குளங்களில் 3 வகையான மீன் குஞ்சுகள் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குளத்தில் 2 ஆயிரம் குஞ்சுகள் வீதம் மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் தயார் நிலையில் உள்ளன, முதற்கட்டமாக தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதம் உள்ள 13 வட்டாரங்களில் உள்ள குளங்களில் மீன்குஞ்சுகள் விடப்படும்.
இதன் மூலம், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கப்பட்டு, உள்நாட்டு மீனவர்களின் சமூக பொருளாதார நிலை மேம்படுவதோடு, கிராமபுற மக்களுக்கு குறைந்த விலையில் புரதச்சத்து நிறைந்த, ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் 30 முதல் 40 டன் மீன்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.