இளைஞர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை 50க்கும் மேற்பட்டோர் கைது
சிவகங்கை அருகே கீழப்பூங்குடியைச் சேர்ந்த இளைஞர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி எஸ்பி அலுவலகத்தின் முன்பு உறவினர்கள் முற்றுகை. பெண் போலீஸ் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கைது.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் அருள்ராஜ். இவர் நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
சம்பவ இடம் வந்த மதகுப்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இறந்த இளைஞரின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதாகவும் இது தற்கொலை அல்ல, கொலை என்று வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கூறி உடலை வாங்க மறுத்து கீழப்பூங்கொடி பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அருகில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாக வேணி ஏற்றி அழைத்து சென்றனர்.
அப்போது இறந்த அருள்ராஜின் சகோதரி அருணா இதனை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீஸ் அதிகாரிகள் அவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.