கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு
சிதம்பரம் நகரில் பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வெளி வட்ட சாலை, கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பள்ளிப்படை பகுதியில் உள்ள தில்லையம்மன் ஓடை பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை ரூ 35 கோடி செலவில் இருபுற வெளிவட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணியின் முதல் கட்டமாக தில்லையம்மன் ஓடை கரையை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் வந்தனர். தில்லையம்மன் ஓடையை ஒட்டி பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணிகளை பார்வையிட்ட அவர், அந்த இடத்தில் சாலை அமையப் போக உள்ள இடத்தையும் நேரில் பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து சிதம்பரம் நகரில் நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். சிதம்பரம் நடராஜா கார்டன், 16 கால் மண்டபத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளையும், அதிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகளையும் அமைச்சர் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சிதுறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.