சர்ச் தேர் பவணியில் பங்கேற்று கிறிஸ்தவர்களுக்கு மரியாதை செலுத்திய இஸ்லாமியர்கள், நீடூரில் பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலய 75வது ஆண்டு திருவிழா – அலங்கார தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு
மயிலாடுதுறை அடுத்த நீடூரில் பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலய 75ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் விழாவில் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர்பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்டஅதிபர் பேரருட்திரு.தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், விவசாயம் செழிக்கவும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து, புனித சூசையப்பர் திருஉருவம் தாங்கிய அலங்கார தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இன்னிசை முழங்க, வானவேடிக்கையுடன் தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன், அப்பகுதியில் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர். இஸ்லாமியர்களுக்கு ஆலய பங்குத் தந்தை மரியாதை செலுத்தினார்.