நாகையில் விமான நிலையம் சிங்கப்பூருக்கு கப்பல் சேவை என மீண்டும் அதிர்ச்சி வைத்தியம்
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி திமுக அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரமாக பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மேலக்கோட்டை வாசல்,அக்கரைகுளம், கீரைகொல்லைதெரு சேவாபாரதி, டாட்டாநகர் பப்ளிக்ஆபீஸ் ரோடு, அண்ணாசிலை, வேதநாயகம் செட்டிதெரு, ஊசி மாதா கோவில் தெரு, உள்ளிட்ட நாகை நகர பகுதியில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கர் திறந்த வெளி வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேட்பாளர் பெயரை தவறாக கூறியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் என்பதற்கு பதிலாக சுர்ஜித் சிங்க் என கூறி பின்னர் சுதாரித்துக்கொண்ட ஓஎஸ்.மணியன் மீண்டும் சுர்ஜித் சங்கர் என கூறி வாக்கு சேகரித்தார்.
பின்னர் பேசிய அதிமுக வேட்பாளர் நாகையில் நான் வெற்றிபெற்றால் விமான நிலையம் அமைக்கப்படும், நாகையில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும், மாதம் 1000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி இரைத்தார்.