பஹ்ரைன் நாட்டில் கைது செய்யப்பட்ட நெல்லை மீனவர்கள் விடுதலையாகி இந்தியா வந்தனர்
பஹ்ரைன் நாட்டில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டம் இடிந்தகரை மீனவர்கள் விடுதலையாகி இந்தியா வந்தனர். திருவனவந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கியவர்களுக்கு தமிழக சபாநாயகர், நெல்லை எம்.பி ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
விடுதலையாவதற்கு உதவி செய்த தமிழக முதல்வர், சபாநாயகர், எம்.பிக்கு நன்றி தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், இடிந்தகரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக சென்று அந்நாட்டில் மீன்பிடித் தொழிலில் செய்து வந்தனர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, பஹ்ரைன் நாட்டு கடலோர காவல்படையினரால் 11.09.2024 அன்று எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு பஹ்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 28 மீனவர்களுக்கு பஹ்ரைன் நாட்டு அரசு 6 மாத காலம் சிறைத்தண்டனை விதித்தது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு மீனவர்களை விடுதலை செய்யுமாறு கடிதம் வாயிலாக தெரிவித்தார்கள். இதுபோன்று நெல்லை எம்.பி. ராபர்ட்புரூசும் ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.
அரசின் பல்வேறு நடவடிக்கையால் மீனவர்களின் சிறைத்தண்டனைக் காலம் 6 மாதத்திலிருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, சிறையில் அடைக்கப்பட்ட இடிந்தகரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்களும் மூன்று மாத கால சிறைத்தண்டனை முடிவுற்று பஹ்ரைன் நாட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 18.12.2024 அன்று விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்த மீனவர்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு , நெல்லை எம்.பி ராபர்ட்புரூஸ் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர். அவர்களின் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க கட்டித் தழுவி வரவேற்றனர்.
இதுகுறித்து விடுதலையான மீனவர்கள் கூறுகையில் ஈரான்நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பஹ்ரைன் நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டை 3 மாதமாக குறைக்கப்பட்டது. இதற்காக முயற்சித்து எங்கள் விடுதலைக்கு காரணமான தமிழக முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, எம்.பி ராபர்ட்புரூஸ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் , அனைத்து உதவிகளும் எங்களுக்கு கிடைத்தது, தற்போது தாயகம் திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். விடுதலையான மீனவர்களின் குடும்பத்தினரும் தமிழக முதல்வர் , சபாநாயகர், நெல்லை எம்.பி ஆகியோருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இடிந்தகரை மீனவர்கள் பஹ்ரைன் நாட்டில் கைது செய்யப்பட்ட தகவல் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றதும் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கடிதம் எழுதினார். இதன்காரணமாக தண்டனை காலம் குறைக்கப்பட்டு தற்போது விடுதலையாகியுள்ளனர். மேலும் முதல்வர் மீனவர்கள் கைதான காலத்தில் அவர்கள் குடும்பத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கினார்.
இதுபோன்று வெளிநாடுகளில் கஷ்டப் படும் தமிழர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவே தனி அமைச்சகமே முதல்வர் உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். சிறையில் இருந்து விடுதலையானவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மறைந்த முதல்வர் கலைஞர் ஆதரித்ததாக சிலர் கூறுகின்றனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த சபாநாயகர் கலைஞர் ஒரேநாடு ஒரே தேர்தலை ஆதரிக்கவில்லை இது தவறான தகவல் , 1970- ம் ஆண்டு அன்னை இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் மன்னர் மானியம் ஒழிப்பு முறை மசோதா கொண்டு வந்தார்கள் பாராளுமன்றத்தில் அது நிறைவேறியது, ஆனால் மேலவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனை அடுத்து பிரதமர் இந்திரா காந்தி மேலவையில் மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
எனவே ஆட்சி ஒரு ஆண்டு காலம் இருந்த நிலையிலும் ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்தித்து மீண்டும் இந்த சட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறி ஆட்சியை கலைத்தார் அந்த காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் தமிழக சட்டமன்றத்திற்கும் ஓர் ஆண்டு காலம் ஆட்சி இருந்த நிலையில் அவரும் மன்னார் ஆட்சி மானியத்தை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த நிலையில் மத்தியில் தேர்தல் நடக்கும் நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கு 10 மாத காலம் உள்ள நிலையில் மீண்டும் தேர்தல் நடந்தால் கடும் சிரமம் ஏற்படும் எனவே ஒரே தேர்தலாக நடத்த வேண்டும் என்றாரே தவிர ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஆதரிக்கவில்லை, அன்று மன்னர் ஒழிப்பு சட்ட மசோதா தோல்வி அடைந்ததால் ஆட்சியை கலைத்தார் அதேபோன்று 2- ல் மூன்று பங்கு ஆதரவு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தேவைப்படுகிறது மோடி ஆட்சியை கலைப்பாரா என பத்திரிகையாளர்கள்தான் கேட்க வேண்டும் என கூறினார்.
இடிந்தகரை மீனவர்கள் 28 பேர் ஈரான்நாட்டில் மீன் பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பஹ்ரைன் நாட்டு அரசால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலைக்காகவும் தண்டனையை குறைக்கவும் நானும் ஒன்றிய அரசை வலியுறுத்தினேன் மேலும் தமிழக முதல்வர் தமிழக சட்டப்பேரவை தலைவர் ஆகியோரும் பெரும் முயற்சி மேற்கொண்டனர் ஆகையால் இன்று விடுதலையாகி வந்துள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, தெற்காசிய மீனவ தோழமை பங்குதந்தை சர்சில், தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் துபாய் மீரான், ஒன்றிய செயலாளர் ஜேசாப் பெல்சி முன்னாள் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மோகன் குமார் ராஜா திரு தமிழ்செல்வன் மனித உரிமை மாநில துணைத்தலைவர் திரு விவேக் முருகன் வள்ளியூர் நகர தலைவர் பொன் பாண்டி பலர் கலந்து கொண்டனர்.