வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%-ஆகவே தொடரும்.
நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் இருக்கும். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. உள்நாட்டு வளர்ச்சியை நோக்கி, நிலையான முதலீடு மற்றும் மேம்பட்ட உலகளாவிய சூழல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும்.
2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.6% ஆக உள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டான 7% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியாகும். ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் நாட்டின் மொத்த பணவீக்கம் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
பணவீக்கத்தில் கவனம் செலுத்தி 4% இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். மார்ச் 29, 2024 நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 645.6 பில்லியன் டாலரை எட்டியது எனவும் தெரிவித்தார். எனவே, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கி முடிவால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் பழைய நிலையிலேயே நீடிக்கிறது.