இக்கட்சியை யாராலும் வெல்ல முடியாது ஓ பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் நின்றால் இக்கட்சியை யாராலும் வெல்ல முடியாது என முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிஷ்ணன், வெல்லமண்டி என். நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம்,
தலைமைக் கழகத்தைச் சேதப்படுத்தியதாக எங்கள் மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டுவதற்கு பதிலாக காவல் துறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்க்க வேண்டும்.
அதில் தலைமைக் கழகத்தை யார் சேதப்படுத்தியது என்பது தெரியவரும்.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலர் ஜெயலலிதாதான் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை ரத்து செய்வதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமை எடப்பாடி பழனிசாமிக்கும் கிடையாது.
ஜெயலலிதா 30 ஆண்டு காலமாக தியாக வாழ்க்கை வாழ்ந்து, பொதுச் செயலராக இருந்து கழகத்தைக் கட்டுக்கோப்பாக நடத்தியதால்தான் இக்கட்சி மாபெரும் இயக்கமாக இருந்தது.
எனவே கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாதான் இருக்க வேண்டும் என பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை ரத்து செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என 5 பேர் இணைந்து பணியாற்றினோம்.
இந்நிலையில் ஒற்றைத் தலைமைதான் வேண்டுமெனக் கூறி தன்னிடம் உள்ள பண பலத்தைப் பயன்படுத்தி, சிலர் ஒன்று சேர்ந்து சதி வேலை செய்தனர். அதை எதிர்த்துதான் இந்த தர்மயுத்தம் நடத்தப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலராகப் பொறுப்பேற்ற பிறகு ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குக் காரணமான எடப்பாடி பழனிச்சாமிதான் இக்கட்சியின் அழிவுக்கும் காரணமாக இருக்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும்போது யாருடன் கூட்டணி என்பது முறையாக அறிவிக்கப்படும். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டபோது, அது ஆண்டிகள் கூடிக் கலையும் மடமாகத்தான் இருக்கும் எனக் கூறினேன்.
அது இப்போது நிகழ்ந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அல்லாத டிடிவி தினகரன், சசிகலா உள்பட அதிமுகவில் உள்ள அனைவரும் இணைந்து தேர்தல் களத்தில் நின்றால், இக்கழகத்தை வெல்வதற்குத் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. இக்கட்சி ஒன்றிணைவதற்கு முடியாது எனக் கூறும் ஒரே நபர் எடப்பாடி பழனிச்சாமிதான் என் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தஞ்சையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்ட ஏற்பாட்டினை இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் செய்து இருந்தார் மண்டபம் முழுவதும் கூட்டம் நிரம்பி இருந்தன மண்டபத்தின் வெளிப்புறத்தில் எல்இடி திரை வைக்கப்பட்டு தொண்டர்கள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்தன அங்கும் திரளான கூட்டங்கள் காணப்பட்டிருந்தது மண்டபம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் மண்டபத்தின் முகப்பு பகுதியில் ஓபிஎஸ்ஐ வரவேற்கும் விதத்தில் பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டு இருந்தன இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம் பலத்தை காட்டவே இது போன்ற ஏற்பாடுகள் செய்திருப்பதாக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு.