திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக நெய் குட காணிக்கை
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக நெய் குட காணிக்கை செலுத்த பக்தர்களின் வசதிக்காக ஒரு மாதத்திற்கு முன்பே நெய் குட காணிக்கை விற்பனையை திருக்கோவில் துவக்கி வைத்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்….
உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற உள்ளது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் சன்னதி கருவறை அருகே அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனை தொடர்ந்து அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
13 ஆம் தேதி ஏற்றப்படும் மகா தீபமானது தொடர்ந்து 11 நாட்களுக்கு அண்ணாமலையார் ஜோதிப் பிழம்பாய் தீபமலை மீதிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இதற்காக மகாதீப கொப்பரையில் 3,500 கிலோ நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணி திரியாக பயன்படுத்தப்பட உள்ளது.
மகா தீபத்திற்கு நெய் காணிக்கை பக்தர்கள் செலுத்த ஏதுவாக, இந்த ஆண்டு முன்கூட்டியே அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள அலுவலகம் முன்பு நெய் காணிக்கைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக 1 மாதத்திற்கு முன்பே இன்று நெய்குட காணிக்கையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது கோவில் இணையானையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்தும் ஆன்மீக பக்தர்கள் நெய் குடத்தை காணிக்கையாக அளித்து வருகின்றனர்.
மேலும் நெய் காணிக்கைப் பணமாக செலுத்த பக்தர்களின் வசதிக்காக ஒரு கிலோ நெய் ரூபாய் 250, அரை கிலோ நெய் ரூபாய் 150, கால் கிலோ நெய் ரூபாய் 80 என ரொக்கமாகவும் காணிக்கை பெறப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காகவும், நெய் காணிக்கை செலுத்த ஏதுவாகவும் அண்ணாமலையார் திருக்கோவில் பக்தர்கள் தங்களது நெய் காணிக்கையை ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு பிரசாதமாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.