திருச்சியில் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் பலி
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரம் தொடர்ந்து மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகளும், பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகரில் பகலில் வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேல் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் சாலை முழுவதும் மழை நீர் ஆறாக ஓடுகிறது.
குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் மேல வடக்கு தெருவில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.அப்போது அந்த வீட்டில் இருந்த செல்லையா (75) என்பவர் மீது மேற்கூரை விழுந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த முதியவரை உயிருடன் மீட்டு தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.