வரும் 24ம் தேதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம்: மாஜி அமைச்சர் முனுசாமி பேட்டி
முன்னாள் அமைச்சர் முனுசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், வரும் 24ம் தேதி, 40 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.
தே.மு.தி.க., கூட்டணியில் இடம் பெறுமா என்பதை பொருத்திருந்து பாருங்கள். கோவையில் நடந்த பேரணியில், மாணவர்களை பயன்படுத்தியதாக புகார் கொடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். இப்போது, ஜெயலலிதாவை புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, அக்கட்சியின் மாநில தலைவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மட்டுமின்றி அண்ணாத்துரை போன்றவர்களையும் இகழ்ந்து பேசிய போது, ஏன் கண்டிக்கவில்லை.
திருச்சி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அ.தி.மு.க., கூட்டணிக்கு வருவதாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, திடீரென கூட்டணி மாறிய பா.ம.க.,வுக்கு தர்மம் நல்ல பதிலை கொடுக்கும். மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான தேர்தலாக இருப்பதாலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டி இருப்பதாலும், தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் அவதிகளையும் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வோம்.
ஒரு பலமான இயக்கத்துக்கு, கூட்டணி தேவைப்படும் நேரத்தில் ஏற்றுக் கொள்வோம். கூட்டணியில் சேர விரும்பாதபட்சத்தில், எங்கள் பலத்தையே வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தான் அ.தி.மு.க., வரலாறு. பல தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து இருக்கிறோம்.
‘எந்தக் காலத்திலும், எந்த காரணத்துக்காகவும் கட்சி அழிவதற்கு துணையாக இருக்க மாட்டேன்,’ என்று கூறிய பன்னீர்செல்வம், அ.தி.மு.க., சின்னத்தை பயன்படுத்தக் கூடாது, என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், ‘எங்களுக்கு கிடைக்காவிட்டால், அந்த சின்னத்தை முடக்குங்கள்’ என்று கூறுகிறார். இதிலிருந்தே அவர் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்று தெரிகிறது.
அ.தி.மு.க., 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியால் தான் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தேர்தல் முடிவுக்கு பின், யார் யாரோடு மோதி வெற்றி பெற்றனர் என்பது தெரியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.