சித்திரை வசந்த விழாவினையொட்டி ஐயங்குள தீர்த்தத்தில் தீர்த்த வாரி மேற்கொண்ட அண்ணாமலையார்
அண்ணாமலையார் சூலத்திற்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்…
நினைத்தாலே முக்தி தரும் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் சித்திரை வசந்த உற்சவம் கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது. சித்திரை வசந்த விழாவின் நிறைவு நாளான இன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு இன்று காலை திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அண்ணாமலையார் திருக்கோவில் இருந்து அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் புறப்பட்டு ஜய்யங்குளத்தினை சென்றடைந்தனர்.
பின்னர் அங்கு ஐயங்குளத்தில் சிவசாச்சரியார்கள் வேதமந்திரம் ஒலிக்க அண்ணாமலையார் சூலத்துடன் 3 முறை குளத்தில் முழுகி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அண்ணாமலையார் சூலத்திற்கு பால்,தயிர்,சந்தனம்,மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று கற்பூர தீப ஆராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாட்டனர்.
தொடர்ந்து சித்ரா பௌர்ணமி தினமான இன்று இரவு மூன்றாம் பிரகாரத்தில் சித்திரை வசந்த உற்சவர் நிகழ்வாக மன்மத தகனம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.