தமிழகம் முழுவதும் உள்ள PACL நிறுவனத்தின் ஒரு கோடி முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள், குடும்பத்தினர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு – விவசாய முன்னேற்றக் கழகத்தினர் எச்சரிக்கை.
கரூரில் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் விவசாய முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் செல்ல.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் PACL நிறுவனத்தில் 5 கோடியே 85 இலட்சம் முதலீட்டாளர்கள் 49 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1கோடி முதலீட்டாளர்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். நிறுவனம் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடந்த 02.02.2016 அன்று தடைவிதித்து முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு பணத்துடன், வட்டியும் சேர்த்து 6 மாத காலத்தில் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி R.M.லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், 8 வருட காலங்கள் ஆகியும் இதுவரை முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுப் பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.
எந்த ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே, வருகிற 19-ந்தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் விவசாய முன்னேற்றக்கழகம் PACL முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள் ஆதரவோடு சுயேட்சை வேட்பாளராக கரும்பு விவசாயிகள் சின்னத்தில் போட்டியிடும் சக்திவேலுக்கு ஆதரவளிப்பது என்றும், பிற அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் எந்த ஒரு கட்சியினுடைய வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று முடிவு செய்து தமிழகம் முழுவதும் உள்ள ஒருகோடி முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள் குடும்பத்தினர்கள் நோட்டா (NOTA) வுக்கு வாக்களிக்க உள்ளோம் என்றார்.